LightBlog

Wednesday, October 9, 2024

மொபைல் போனை 'ஆப்' செய்ய மின் வாரிய அதிகாரிகளுக்கு தடை

 

''மொபைல் போனை எந்த காரணம் கொண்டும், 'ஆப்' செய்யக்கூடாது. அதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின் வாரிய பொறியாளர்களை, அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.


இதில், மின் வாரிய தலைவர் நந்தகுமார், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், செந்தில் பாலாஜி கூறியதாவது:


மின் வினியோக பெட்டிகள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை, பொறியாளர்கள் கள ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


அம்பத்துாரில் தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பியை உடனே உயர்த்த வேண்டும். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


தேவைப்படும் அனைத்து தளவாட பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அதிகாரிகளும் தங்களின் மொபைல் போனை எந்த காரணம் கொண்டும், 'ஆப்' செய்யக்கூடாது. இதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


மழை காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல், மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள, 'வாக்கி டாக்கி' இயந்திரங்களை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

LightBlog