அரசு ஊழியருக்கான வாக்குறுதியை நிறைவேற்றியதா தி.மு.க அரசு? - Seithisudar

Tuesday, September 26, 2023

அரசு ஊழியருக்கான வாக்குறுதியை நிறைவேற்றியதா தி.மு.க அரசு?

 

அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., அரசு அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், நுாறு சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுவது கண்டிக்கதக்கது, என அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் லெட்சுமி நாராயணன் கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும். 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு 10 சதவீதமும், 80 வயது நிறைவு செய்தவர்களுக்கு மேலும் 10 சதவீதமும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.


மருத்துவக்காப்பீடு திட்டத்தில் மருத்துவ செலவு ரூ.5 லட்சத்திற்கு மேல் வரம்பு உயர்த்தப்படும். அனைத்து வகையான மருத்துவ செலவினங்களும் அடங்கும் வகையில் காப்பீடு திட்டம் மாற்றி அமைக்கப்படும்.அ.தி.மு.க., அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டு இறந்த மக்கள் நலப்பணியாளர் வாரிசுக்கு அரசு வேலையும், குடும்ப நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கதர் கிராம தொழில் வாரிய தொழிலாளர்கள், கொசு ஒழிப்பு பரிசோதகர்கள், விதை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பணி, ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.


போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது அ.தி.மு.க., அரசால் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு புதிய நியமனம் நடக்கும். 2ம் நிலை போலீசாருக்கு 7 ஆண்டுகளில், முதல்நிலை போலீசாருக்கு 10 ஆண்டுகளில், எஸ்.எஸ்.ஐ.,களுக்கு பதவி உயர்வு 20 ஆண்டுகளில் வழங்கப்படும்.


துாய்மை பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். பணியில் இருக்கும் போது இறந்த துாய்மை பணியாளர் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் கருணை அடிப்படையிலான பணி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப் படவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் நுாறு சதவீதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறுகிறார். இதை கண்டிக்கிறோம், என்றார்.


1 comment:

  1. திமுக அரசாங்கம் நிறைவேற்றாத கோரிக்கைகள் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இது விடியல் அரசாங்கம் அல்ல வெத்து அரசாங்கம் என்பதை நிரூபித்து விட்டது.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot