விஜயை சந்தித்ததால் ஆசிரியர் சங்கம் சலசலப்பு - Seithisudar

Thursday, June 19, 2025

விஜயை சந்தித்ததால் ஆசிரியர் சங்கம் சலசலப்பு

 




''எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தரக்கோரி த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் மகேஷ்,'' என குற்றம்சாட்டினார் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனர் மாயவன்.


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தது ஏழு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து வலியுறுத்தினோம்.


ஆனால், நிதி நிலையைக் காரணம் காட்டி, அரசு தரப்பில் எதையும் செய்து கொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எதுவும் நடக்கவில்லை.


எங்கள் கோரிக்கை மற்றும் போராட்டங்களுக்கு வலுசேர்ப்பதற்காக, ஆளுங்கட்சிக்கு எதிர் நிலையில் இருந்து செயல்படும் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயை சந்திக்க முடிவெடுத்து, கடந்த 13ல் சந்தித்தோம்.


போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இது ஆளுங்கட்சி தரப்புக்கும் கல்வி அமைச்சர் மகேஷுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியர்களின் மொத்த ஆதரவையும் தி.மு.க., இழந்து விட்டதாக, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், எங்கள் சங்கத்தை பிளக்கும் பணியில் இறங்கி விட்டனர்.


ஏற்கனவே சங்க விதிகளை மீறி செயல்பட்ட, சங்க நிர்வாகிகள் சிலர், 'சங்கத்தில் இருப்போர், ஒருதலைப்பட்சமாக நடிகர் விஜயை சந்தித்துள்ளனர். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை.


'கோரிக்கைகளை அரசுதான் நிறைவேற்ற வேண்டும். அதற்காக, அரசைத்தான் முறையாக அணுக வேண்டுமே தவிர, இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது.


'அரசியல் செய்வது போல, சங்க நிர்வாகிகள் சிலர், நடிகர் விஜயை சந்தித்தது எங்களுக்கு பிடிக்கவில்லை; அதனால், சங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்' எனக்கூறி, சங்கத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்.


பின், அவர்கள் அமைச்சர் மகேஷை சந்தித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிர்வாகிகள், புதிதாக ஒரு சங்கத்தை துவக்கி உள்ளனர். கல்வி அமைச்சர் மகேஷ், தன்னுடைய துறையை மேம்படுத்தும் வேலையை விட்டுவிட்டு, சங்கங்களை பிளவுபடுத்தும் வேலையை தான் அதிகம் செய்கிறார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் வரை ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடரும்.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot