நிபா வைரஸ் பாதிப்பு - ஆறு மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு - Seithisudar

Saturday, September 16, 2023

நிபா வைரஸ் பாதிப்பு - ஆறு மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

 



கேரளாவை ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களில், 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், காய்ச்சல் இருந்தால், அவர்களை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.


கேரளா மாநிலத்தில், 'நிபா வைரஸ்' பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


கடந்த 2018, 2021ம் ஆண்டுக்கு பின், அம்மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவத் துவங்கியுள்ளது.


இதனால், கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள, தமிழக எல்லை மாவட்டங்களில், கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த, அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழகத்தில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்க, கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.


நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது அவசியம்.


எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பெற்று, பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


கேரளாவில் இருந்து வரும் பயணியர் அனைவரையும், முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்த பின் தான், தமிழக பகுதியில் நுழைய அனுமதிக்க வேண்டும்.


தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot