ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை வகுத்துள்ள நிலையில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் மாநிலங்களின் கல்வி சுதந்திரத்தை பாதிப்பதாக இருக்கிறது என்று பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் புதிய கல்விக் கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அதனால் மாநில கல்விக் கொள்கையை வகுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்த குழுவினர் மாநிலக் கல்விக்கான பரிந்துரைகளை தயாரித்து, 2023 மே மாதம் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. அரசின் இந்த உத்தரவை ஏற்று மேற்கண்ட உயர்மட்டக் குழுவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக கல்வியாளர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்தும் கருத்து கேட்டது.
இதற்கிடையே, உயர்மட்டக் குழுவுக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவிட்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் பரிந்துரை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. தற்போது மாநில கல்விக் கொள்கை தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. இரண்டொரு நாளில் அரசிடம் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உயர்மட்டக் குழு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment