நவ. 14 : வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு ? - Seithisudar

Sunday, November 12, 2023

நவ. 14 : வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு ?

 



வங்கக் கடலில் வருகின்ற 14ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்றும் இது 16ம் தேதி வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : “ தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில்16ம் தேதி நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் பரவலாக தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் ஓரீரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின் படி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 15 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ, பாம்பனில் 8 செ.மீ, ராமேசுவரத்தில் 6 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, காஞ்சிபுரம்மாவட்டம் காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.


வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவாய்ப்புள்ளதால் வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot