‘கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் நாடு முழுவதும் தடை விதிக்கக் கூடாது’ என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் விளக்கமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை விசாரித்து வருகிறார். இவர் நேற்று பிற்பகலில் ஒன்றிய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்களை தனது சேம்பருக்கு வருமாறு அழைத்திருந்தார்.
இதன்படி சென்ற வழக்கறிஞர்களிடம், ‘தமிழ்நாட்டில் கூல் லிப் எனும் போதைப்பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரி பல மனுக்கள் தாக்கலாகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகியுள்ளது தெரியவருகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற பொருட்களுக்கு தடை இருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அங்கு இவற்றை தயாரிப்போரிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க இது போன்ற போதை பொருட்கள் பயன்பாடே காரணம்.
இளம் தலைமுறையினரின் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? போதை பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம்போல் செயல்பட தொடங்கி விடுகிறது. போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது போன்ற எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முடிவு செய்ய வேண்டும்.
மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது. கூல் லிப் போதைப்பொருளை பள்ளிகளில் பயன்படுத்துவோர் இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே அதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று செப்.20க்குள் தெரிவிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
* பள்ளி மாணவர்கள் கூல் லிப்-க்கு அடிமையாகியுள்ளது தெரியவருகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற பொருட்களுக்கு தடை இருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment