பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து சென்னையில் தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Seithisudar

Wednesday, September 25, 2024

பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து சென்னையில் தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 



அடிப்படை காரணமின்றி மேற்கொள்ளப்படும் பணிமாறுதல் நடவடிக்கைகளை கண்டித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் துறை அதிகாரிகள் பள்ளிகளில் செய்த ஆய்வில் மாணவர் சேர்க்கையில் போலி கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 


இதேபோல், பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் 2 தலைமையாசிரியர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இத்தகைய தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிக்கல்வித் துறையின் சமீபத்திய பணி மாறுதல், இடைநீக்கம் ஆகிய நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலச் செயலாளர் (தனியார் பள்ளி) கே.வரதராஜன் தலைமையில் பலர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.


தொடர்ந்து வரதராஜன் நிருபர்களிடம் கூறும்போது, “தலைமை ஆசிரியர்கள் மீது புகார்கள் வரும் போது உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடவடிக்கைக்கு பின்னரே அதிகாரிகள் விளக்கத்தை கேட்டுப் பெறுகின்றனர். நிர்வாகச் சிரமங்களை கருத்தில் கொள்ளாமல், உரிய அடிப்படைக் காரணங்கள் இன்றி தலைமை ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை தொடரக்கூடாது” என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot