அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை வெளி சந்தைக்கு வந்தது எப்படி?, உணவகத்திற்கு யார் மூலம் விற்பனைக்கு வந்துது?
துறையூரில் தனியார் உணவகம் ஒன்றில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்படும் அரசு முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் ஆம்லெட், ஆப்பாயில் என தயாரித்து அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது பொற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில், சுமார் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் நாள்தோறும் மதிய உணவிற்காக குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிக குறைந்த விலையில் ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் ரூ. 15-க்கு மேல் ஆம்லெட், ஆப்பாயில் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் தயாரிக்கப்பட்டு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உணவகத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து தான் முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருள்களும் நாள்தோறும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. சமூக வலைதளிலும் வைரலாகி வருகின்றது.
தமிழக அரசால் பள்ளி கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்திற்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் ஆம்லெட், ஆப்பாயில் என தயாரித்து அதிக விலைக்கு அமோகமாக விற்பனை செய்யப்படுவது பார்ப்போரையும் பொற்றோர்களையும், சமூக ஆர்வலர்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் துறையூரில் உள்ள தனியார் உணவகங்களில் நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை வெளி சந்தைக்கு வந்தது எப்படி?, உணவகத்திற்கு யார் மூலம் விற்பனைக்கு வந்துது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment