தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, அரசு வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை 47 லட்சம் பேர் ஆகும். ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
'கால் காசு என்றாலும், கவர்ன்மென்ட் காசாக இருக்கணும்' என்பதுதான் கிராமப்புறங்களில் இன்னும் பேச்சாக இருக்கிறது. அந்தளவுக்கு அரசு வேலைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. கை நிறைய சம்பளம், சலுகைகள் என்று கிடைப்பதால், அரசு வேலையை நாடுவோர் எண்ணிக்கை இன்னும் கணிசமாக இருக்கிறது.
அரசு வேலை நாடுவோர், வேலைவாய்ப்பகம் மூலம் பதிவு செய்து கொள்வது வழக்கம். இப்போது பெரும்பாலான அரசு பணியிடங்களுக்கு தேர்வாணைய எழுத்துத் தேர்வு மூலம் தான் ஆட்தேர்வு நடக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்தேர்வு என்பது மிக மிகக்குறைவாகவே உள்ளது.
அப்படி இருந்தும் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இது தொடர்பாக, தகவல் கோரி, சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். இது குறித்து வெளியான விவரம் பின்வருமாறு: தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் கடந்த மாதம் வரையில், 21 லட்சத்து 74 ஆயிரத்து 48 ஆண்கள், 25 லட்சத்து 76 ஆயிரத்து 4 பெண்கள் என 47 லட்சத்து 50 ஆயிரத்து 52 பேர் பதிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக உள்ளனர். இதில் மருத்துவம், சட்டம், இன்ஜினியரிங், வேளாண்மை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் அங்கம் வகிக்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 56 ஆயிரத்து 897 பேர் வேலை பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
வேலை வேண்டும் என்று இவ்வளவு பேர் பதிவு செய்திருந்தாலும், அரசு வேலைவாய்ப்பு அலுவலங்களில் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்தும், ஆட்கள் வராமல் காற்றாடுகின்றன. ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் முகாம்களில், தேவையான ஆட்கள் கிடைக்காமல், தனியார் நிறுவன நிர்வாகிகள் திணறுவதாக, வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment