7.5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தின் முதல்கட்ட கையெழுத்துத் தொகுப்பினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வீ. ப. ஜெயசீலனிடம் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் அமலராஜன், துணைத் தலைவர் ஐசக் சாம்ராஜ் மாவட்டச்செயலர் மற்றும் மாநிலச் செயலரான துரைச்சாமி பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பா. முருகன் முன்னிலை வகித்தார்.
5 அம்ச கோரிக்கைகள்:
• அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5% உயர் கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் முழுமையாக விரிவுபடுத்திட வேண்டும்.
• உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர் நலன் கருதி ஆங்கில வழி இணைப் பிரிவு மாணவர்களையும் கணக்கிலெடுத்து, பணியிட நிர்ணயம் செய்வதோடு, அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும்.
• தமிழ்நாட்டில் 1991-1992-ம் கல்வி ஆண்டுக்குப் பின்னர் துவக்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளித்து, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 28.02.2011-இல் பிறப்பித்த ஆணையினைச் செயல்படுத்திட வேண்டும்.
• உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை எளிமைப்படுத்துவதோடு தகுதியான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
• தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 2018 விதிகள் 2023-இல், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்கிட வேண்டும்.
No comments:
Post a Comment