குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது - சிக்கியது எப்படி?
`போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?`
▪️ ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
▪️ 50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி கோரியுள்ளார்
▪️ மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல்
▪️ இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
▪️ இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்
▪️ அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகாரளித்தார்
▪️ போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபுஜி. இவர், சில வருடங்களுக்கு முன்பு, தான் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று அங்குள்ள ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த அந்த மனுவில், ‘சுமார் 50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால், அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அந்த நீதிமன்றத்தின் நீதிபதியான மோரிஸ் சாமுவேல், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை வாங்கியுள்ளார். மேலும், அந்த நீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, குறிப்பிட்ட அந்த அரசு நிலம், பாபுஜிக்கு சொந்தமானது என்று மோரிஸ் சாமுவேல் தீர்ப்பு வழங்கி பாபுஜி பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதன்மீது ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாபுஜி, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலை இணைத்து, அந்த அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற வேண்டும் என அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர், மோரிஸ் சாமுவேல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அகமதாபாத் நகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல், குஜராத்தில் வாடகை கட்டிடத்தில் போலியான நீதிமன்றத்தை 5 வருடமாக நடத்தி வந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்தது. இதனையடுத்து, மோரிஸ் சாமுவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மோரிஸ் சாமுவேல், அசல் நீதிமன்றத்தை போலவே போலியான எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் நியமித்து, நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனை நம்பிய பொதுமக்கள், இந்த நீதிமன்றத்தில் நில விவகாரம் தொடர்பாக பல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அசல் நீதிமன்றம் போல், இந்த நீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு விசாரணை நடத்தி மோரிஸ் சாமுவேல் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இதற்கிடையே, மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க, அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை அபகரித்துள்ளார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றத்தை நடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மோரிஸ் சாமுவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment