ஆசிரியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - Seithisudar

Monday, October 7, 2024

ஆசிரியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

 



அரசுப் பள்ளிகளில் அரசாணை 105-ன் கீழ் பணிபுரியும் 107 முதுநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; 


தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 107 முதுநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணைகள் வழங்கப்பட்டு வந்தன. 


அதன்பின் கடந்த 4 மாதங்களாக அரசாணை 105-க்கு கொடுப்பாணை அளிக்கப்படாததால் 107 முதுநிலை ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நடப்பு அக்டோபர் மாதத்தில் வருகின்றன. ஆசிரியர்கள் மகிழ்வுடன் கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் போதுதான் எதிர்கால சமுதாயம் வளர்ச்சி அடையும். 


எனவே, அந்த ஆசிரியர் குடும்பங்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை துரித நடவடிக்கை எடுத்து சம்பளம் வழங்க வேண்டும். இதேபோல், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால் தமிழகதை்தில் வட்டார வளமைய ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் சம்பளம் இன்றி பாதிப்படைந்துள்ளனர். 


எனவே, மத்திய அரசு உடனே தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதனிடையே சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஆ.ராமு கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


சமக்ரா சிக்ஷா திட்டம் அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமானது, மத்திய அரசால் வழங்கப்படும் முதன்மையான நிதி உதவி திட்டமாகும்.


இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்கீடு செய்து செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம் மற்றும் விளைவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளம், புதிய முயற்சிகள், நடப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் அனுமதிக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படுகிறது.


அதன்படி 2024-25ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்காக கடந்த ஏபரல் மாதத்தில் தமிழக அரசின் சார்பாக மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான முதல் தவணை ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.


இதனால் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பு ஆசிரியர், பிசியோதெரபிஸ்ட், கணக்கு தணிக்கை மேலாளர், கம்யூட்டர் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் என 32,500 பேர் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தை இன்னும் பெறாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


எனவே மத்திய அரசு பிஎம்ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க அனுமதித்தால் தான் சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த நிதியை வழங்குவோம் என கூறியிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உடனடியாக சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான முதல் கட்ட தவணை ரூ.573 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot