தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி உள்பட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதி விடுவிக்கப்படாத நிலையில் 15,000 பேரும் சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha Scheme) என்பது மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து பள்ளி கல்வித்துறைக்கு ரூ.3,586 கோடியை வழங்க வேண்டும். இதில் மத்திய அரசு ரூ.2152 கோடி வழங்கும். மற்றவற்றை தமிழக அரசு பங்களிப்பு செய்யும்.
இந்நிலையில் தான் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ரூ.573 கோடி வழங்கப்பட வேண்டும். இந்த தொகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தாமல் தமிழக அரசு உள்ளதால் இந்த தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தார். ஒன்றிய அரசு நிதி வழங்காததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டப் பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான ரூ.2,151 கோடியை ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை.
ஒன்றிய அரசு நிதி வழங்காத போதும் கடந்த 4 மாதங்களாக மாநில அரசின் நிதியில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்திய போதும் நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment