மாணவிக்கு தொல்லை - பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு - Seithisudar

Saturday, December 7, 2024

மாணவிக்கு தொல்லை - பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

 

ஒரு பல்கலையின் ஆராய்ச்சி மாணவி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் மீது பல்கலை பதிவாளரிடம் புகார் அளித்தார்.


எனவே, அவரை கட்டாய பணி ஓய்வில் செல்ல, பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்த பேராசிரியர், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.


விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'விசாரணையில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது. பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து, மாணவி மற்றும் பல்கலை பதிவாளர் மேல்முறையீடு செய்தனர்.


விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு:


தனி நீதிபதிதன் உத்தரவில்,​​50 சதவீத குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். அக்கருத்தை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.


சிறிதளவு அறிகுறி இருந்தாலும் அல்லது பாலியல் அல்லது மனரீதியாக அல்லது உணர்வு ரீதியில் துன்புறுத்துவதற்கான நோக்கம் இருந்து, அக்குற்றச்சாட்டு பொருந்தும் வகையில் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டும்.


எனவே, இந்த உத்தரவை பிறப்பித்த தனி நீதிபதி தவறு இழைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அவரது உத்தரவை ரத்து செய்கிறோம். கட்டாய ஓய்வில் பேராசிரியர் செல்ல வேண்டும்.


மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50,000 ரூபாயை பேராசிரியர் வழங்க வேண்டும். தவறினால், அவரிடமிருந்து சட்டப்படி தொகையை வசூலிக்க பல்கலை நடவடிக்கை எடுக்கலாம்.


இவ்வாறு உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot