அங்கன்வாடி தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் மாதம் தோறும் முதல் தேதியிலேயே வழங்கப்பட வேண்டும் என தொடக்க கல்வித்துறை சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பள்ளிகளில் இயங்கும் மழலையர் வகுப்புகளுக்கான தற்காலிக சிறப்பாசிரியர்களின் பணியியல் மற்றும் ஊதிய விஷயங்களில் புதிய வழிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. இந்த தகவல், தொடக்க கல்வித் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2022-23 கல்வியாண்டில் தொடங்கி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களுக்குள் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள், நிலவும் விதிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கன்வாடி மையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். இங்கே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக் குழு (SMC) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற முறையில் (ECS) ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வூதியம் மாதந்தோறும் முதல் தேதியிலேயே வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான காலதாமதமும் ஏற்படக்கூடாது என்பதுடன், இதற்கான கண்காணிப்புப் பொறுப்பை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பு (casual leave) அனுமதிக்கப்படும். அவர்களின் அனைத்து விவரங்களும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தனித்த EMIS எண் வழங்கும் பணியும் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment