20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி - உதயநிதி ஸ்டாலின் தகவல் - Seithisudar

Tuesday, May 20, 2025

20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி - உதயநிதி ஸ்டாலின் தகவல்

 




தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. 


இதில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 


தமிழ்நாடு முதல்வர் கல்லூரி பயிலும் மாணவர்களை திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கிடவும், அவர்கள் உயர்கல்வி கட்டாயம் பயில்வதை உறுதி செய்திடவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


தொழில்நுட்ப திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


முதல்வரின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், உயர் கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, நிதித்துறை செயலாளர் (செலவினம்) நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி,தொழில் நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot