நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்வி சுற்றுலாவுக்கு 22 மாணவர்கள் ஜெர்மன் பயணம் - Seithisudar

Sunday, May 25, 2025

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்வி சுற்றுலாவுக்கு 22 மாணவர்கள் ஜெர்மன் பயணம்

 



நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து கல்வி சுற்றுலாவுக்காக அரசு பள்ளிகளை சேர்ந்த 22 மாணவ-மாணவிகள் விமானம் மூலமாக ஒரு வார காலம் ஜெர்மன் நாட்டில் சுற்றுப்பயணத்துக்கு புறப்பட்டு சென்றனர். 


முதல்முறையாக விமானத்தில் பறப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அரசு பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அனைத்து அரசு பள்ளிகளில் கடந்த 2023-24ம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளை, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு அரசு அழைத்து செல்கிறது. 


இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு அரசு பள்ளிகளில் நடைபெற்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளிகளை சேர்ந்த 9 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 22 பேர் ஒரு வார காலம் ஜெர்மன் நாட்டின் கல்வி சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்நிலையில், ஜெர்மன் நாட்டில் ஒரு வார காலம் கல்வி சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 22 அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் நேற்றிரவு சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து விமானம் மூலமாக ஜெர்மன் நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவாக சென்று வந்து பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் ஜெர்மன் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவாக செல்லவிருந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 22 மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதி அரசு பள்ளிகளில் படிக்கிறோம். 


நாங்கள் இதுவரை வானில் உயரமாக பறக்கும் விமானங்களை, தரையில் நின்றபடி அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறோம். அரசு பள்ளிகளில் எங்களை அரசு தேர்வு செய்து, தற்போது முதன்முறையாக விமானத்தில் பறக்க வைத்துள்ளனர். இது எங்களால் மறக்க முடியாத ஆச்சரியமாக உள்ளது. இதற்காக அரசுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


வெளிநாட்டு கல்வி சுற்றுலா, எங்களின் வாழ்க்கையில் புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். அதோடு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு கல்வி கற்றுக் கொடுக்கின்றனர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டு, எங்களுடைய கல்வியின் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும். 


மொத்தத்தில் இந்த விமான பயணம், அரசு பள்ளி மாணவ-மாணவிகளான எங்களாலும், சாதிக்க முடியும் என்ற மன உறுதியை ஏற்படுத்தி உள்ளது என்று அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot