அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா: பள்ளிக் கல்வித் துறை தகவல் - Seithisudar

Monday, May 19, 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா: பள்ளிக் கல்வித் துறை தகவல்

 



அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


அதன்படி இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக காத்திருப்போர் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பட்டியலில் உள்ள மாணவர்கள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கலாம.


சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்பவருக்கு பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் அவசியம். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உடைமைகள், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும். மாணவிகளை அழைத்துச் செல்லும் போது கட்டாயம் 20 பேருக்கு பெண் ஆசிரியர் ஒருவரை அனுமதிக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். பயிலரங்கச் செயல்பாடுகள், பயிற்சிக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்துக்கு மாணவிகளும், சேலம் மாவட்டத்துக்கு மாணவர்களும் கோடை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த மாத கடைசி வாரத்தில் கோடை சுற்றுலா சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot