தொழில்முனைவோராக புதிய சான்றிதழ் படிப்பு அறிமுகம் - Seithisudar

Thursday, May 29, 2025

தொழில்முனைவோராக புதிய சான்றிதழ் படிப்பு அறிமுகம்

 



இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முனைவு தொடர்பான பல்வேறு குறுகிய கால பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.அம்பலவாணன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியில் பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் சேரலாம். மொத்தம் 2 செமஸ்டர்கள். தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இது அருமையான படிப்பு. வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மொத்தம் 50 இடங்கள் உள்ளன. பயிற்சி கட்டணம் ரூ.80 ஆயிரம். இதற்கு பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்யப்படும்.


தொழில்நிறுவனங்களின் நிதியுதவி, சிஎஸ்ஆர் நிதி போன்றவற்றின் மூலம் படிப்பு கட்டணத்தை செலுத்தலாம். இன்றைய சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கள அனுபவம் உள்ளிட்டவை இப்படிப்பின் சிறப்பு அம்சங்கள் ஆகும். மாணவர்கள் மாணவர்கள் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுக்கு சென்று தொழில்முனைவோருக்கு தேவையான வணிக திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot