இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் அரசின் உதவியுடன் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.டி.இ., எனப்படும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும், ஏழை குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும் முதல் வகுப்பில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இந்த நடைமுறை, 2013 - 14ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இதன்படி, மாணவர் சேர்க்கை ஏப்., 2ல் துவங்கி மே 29க்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், மாணவர் சேர்க்கை அறிவிப்பு, rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தமிழக அரசால் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு மே மாதம் துவங்கியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இணையதளத்தில் கடந்த ஆண்டு அறிவிப்பு மட்டுமே உள்ளது. இதனால், தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முடிந்ததாக கூறப்படும் நிலையில், அரசு உடனடியாக அறிவிப்பை வெளியிட்டு, ஏழை குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி பெற முயற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், மாநில அரசே ஊதியம் வழங்கியது போல, இந்த திட்டத்துக்கும், தமிழக அரசே நிதி ஒதுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கான நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்த திட்டத்தின் கீழ், 8,000 பள்ளிகளில் படித்த, 75,000 குழந்தைகளுக்கு நிதி வழங்க முடியவில்லை. எனவே, இந்த ஆண்டு சேர்க்கையை துவக்குவதில் தாமதமாகிறது.
'மத்திய அரசு நிதி வழங்காததால், ஆர்.டி.இ., மாணவர்களுக்கான கல்வியை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சட்டசபையில் தெரிவித்து உள்ளார். எனினும், மத்திய அரசின் நிதியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment