12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை - Seithisudar

Monday, June 9, 2025

12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை

 



தமிழகத்தில் 12 ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லை. காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை அரசு நிரப்புமா என கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 2011 வரை கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆண்டுதோறும் ஆசிரியர் நியமனங்கள் நடந்தன. முன்னாள் முதல்வர் கருணாநிதி 2008 முதல் 2010 வரை 16,401 ஆசிரியர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011 முதல் 2015 வரை தொடக்க பள்ளிகளில் 12,259 ஆசிரியர்களும், 2012 டிச.,13 ல் ஜெயலலிதாவால் 20,920 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் உத்தரவு வழங்கியது பள்ளி கல்வித்துறையில் இன்று வரை சாதனையாக உள்ளது.


கிடப்பில் போடும் அமைச்சர்


ஆனால் 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்துறை தத்தளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கியும் 12 ஆண்டுகளாக தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை. சமூக வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி தான் முக்கியம்.


ஆனால் தமிழகத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. தற்போதைய நிலையில் அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர் நியமனத்தில் அக்கறை செலுத்துவதில்லை. அமைச்சர் மகேஷின் கவனத்திற்கு ஆசிரியர்கள் கொண்டு சென்றால் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கோரிக்கையை கிடப்பில் போடுகிறார். முதல்வர் ஸ்டாலின் 2024ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் ஜன., 2026க்குள் 19,260 ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். ஆனால் அதற்கான அரசாணை இதுவரை வெளியிடவில்லை என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.



கண்துடைப்பான நடவடிக்கை

அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், மகளிர் உரிமை தொகை, டாஸ்மாக்கிற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்வதில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை.



பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும், ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க நிதிப்பற்றாக்குறை உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். அதேநேரம் இத்துறையில் ரூ.பல லட்சங்களில் திட்டப் பணிகள் படுஜோராக நடக்கின்றன. லட்சக்கணக்கில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்களை மட்டும் அரசு பெருமையாக வெளியிட்டு வருகிறது.


ஆனால் அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள், ஆசிரியர் நியமனங்கள் குறித்து எதுவும் மேற்கொள்ளவில்லை. 2011ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.


டி.இ.டி., தேர்ச்சி பெற்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகுதி உள்ளவர்களாக உள்ள நிலையில் நியமனத் தேர்வு என்ற பெயரில் புதிதாக தேர்வு நடத்தி 2700 பேரை நியமிக்க உள்ளது. தகுதி உள்ளவர்களும், காலியிடங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது இதுபோல் குறைந்த எண்ணிக்கையிலான நியமனங்கள் என்பது கண்துடைப்பான நடவடிக்கையாகவே உள்ளது என்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot