ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பிக்க ஜூன் 25 கடைசி தேதி - Seithisudar

Friday, June 20, 2025

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பிக்க ஜூன் 25 கடைசி தேதி

 



அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக ஜூன் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.


அதன்படி, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலமாக ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 25-க்கு பிறகு எவ்விதமான மாறுதல் கோரும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.


மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும் போது எமிஸ் இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட தனிப்பட்ட ஐ.டி.,யை பயன்படுத்தி மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள உள்நுழைவு ஐ.டி.,யில் ஆசிரியர் சுயவிவரம் பக்கத்திற்குச் சென்று தவறாக உள்ள விவரங்களை சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தங்களுடைய ஐ.டி.,யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் சமர்பிக்க வேண்டும்.


ஆசிரியரின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பெற்ற தொடர்புடைய கல்வி அலுவலர்கள் சரிபார்த்து பதிவேற்றம் செய்வதுடன், ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகையில் விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், பணி நிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கோருபவர்கள் தேவையான ஆவணங்களை முழுமையாக இணைக்க வேண்டும். ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு இருப்பது பின்னர் கண்டறியப்பட்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி ஒப்புதல் தரவேண்டும். 


மேலும், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுகள் பதவி வாரியாக கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot