BS Aerospace and Drone Technology - ஆன்லைன் படிப்பு - சென்னை IIT விரைவில் அறிமுகம் - Seithisudar

Sunday, June 22, 2025

BS Aerospace and Drone Technology - ஆன்லைன் படிப்பு - சென்னை IIT விரைவில் அறிமுகம்

 



பிஎஸ் ட்ரோன் டெக்னாலஜி ஆன்லைன் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி விரைவில் அறிமுகப்படுத்துகிறது.


சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்தும் பால்ஸ் (PALS)நிறுவனத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, திருப்பதி ஐஐடி இயக்குனர் சத்யநாராயணா ஆகியோர் நேரடியாகவும், புவனேஸ்வர் , தார்வார்ட், ஐதராபாத், பாலக்காடு ஐஐடி- களின் இயக்குநர்கள் காணொலி வாயிலாகவும் கலந்துகொண்டனர். பால்ஸ் (PALS) அமைப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


இதைத் தொடர்ந்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியது: “ஐஐடி முன்னாள் மாணவர்கள் சமூகத்துக்கு பல்வேறு வழிகளில் தொண்டாற்றி வருகின்றனர். பால்ஸ் நிறுவனத்தின் மூலம் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ளனர். பிரதமரின் ‘உன்னத பாரதம்’ திட்டத்துக்கு அடிப்படை பொறியியல் பிரிவுகளில் படித்த பொறியாளர்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். சிவில் சர்வீஸ் பணிக்கும் பொறியாளர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்.


சர்வதேச அளவிலான கியூஎஸ் தரவரிசையில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட எண்களில் இருந்தோம். ஆனால், தற்போது 47 புள்ளிகள் அதிகமாக பெற்று 150-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி அடிப்படையில் இந்த நிலையை அடைந்துள்ளோம். ஐஐடி மாணவர்களின் வேலை வாய்ப்பை இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறோம். மேலும் ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம்.


பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி சென்னை ஐஐடியில் சேருவதும், அதேபோல் பழங்குடியின மாணவர் ஒருவரும் நேவல் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேருவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் பட்டதாரிகளும், குறிப்பாக பழங்குடியின மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்வதும் மகிழ்ச்சி தருகிறது. இதன்மூலம், அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டம் நிறைவேறுவதாக நாங்கள் கருதுகிறோம்.


சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய பட்டப்படிப்புகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. பிஎஸ் ட்ரோன் டெக்னாலஜி ஆன்லைன் படிப்பை செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot