ஒரே பாடத்திற்கு 2 வினாத்தாளா? 6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வினோதம் - Seithisudar

Tuesday, September 19, 2023

ஒரே பாடத்திற்கு 2 வினாத்தாளா? 6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வினோதம்

 

மதுரையில் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இன்று (செப்., 19) முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கவுள்ளது. இதில் தொடக்கக் கல்விக்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் மாநில பொது வினாத்தாள் முறையும், பள்ளிக் கல்விக்கு உட்பட்ட உயர் நிலை பள்ளிகளில் படிக்கும் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் முறையும் பின்பற்றும் நிலை உள்ளதால் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.


மாநில அளவில் இந்தாண்டு காலாண்டு தேர்வில் எஸ்.சி.இ.ஆர்.டி., (மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்) தயாரித்த பொது வினாத்தாள் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது.


சில மாவட்டங்களில் அதற்கு முன்பே மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலித்து மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. இதனால் மதுரையில் செப்., 15ல் துவங்கிய காலாண்டு தேர்வில் மேல்நிலை பள்ளி மாணவர்கள் மாவட்ட வினாத்தாள் முறையில் தேர்வு எழுதினர்.


இன்று (செப்., 19) முதல் தொடக்க கல்வி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதற்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் மாவட்ட வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் 'தொடக்க கல்விக்கு உட்பட்ட நடுநிலை பள்ளிகளில் (6, 7, 8ம் வகுப்பு) இணை இயக்குநர் உத்தரவின்பேரில் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்த பொது வினாத்தாள் மட்டுமே பின்பற்ற வேண்டும். இதற்காக ஏற்கனவே மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் திருப்ப வழங்கப்படும்' என நேற்று வட்டாரக் கல்வி அலுவலர்கள்அனைத்து நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் பள்ளிக் கல்விக்கு உட்பட்ட (6, 7, 8ம் வகுப்பு) இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஒரே பாடங்களுக்கு இரண்டு வகை வினாத்தாள் மூலம் காலாண்டு தேர்வு வினோதம் ஏற்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் கூறியதாவது:

மாவட்ட வினாத்தாள் தயாரிக்க மாணவர்களிடம்ரூ.60, ரூ.80, ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் தொடக்க கல்வித் துறை மட்டும் 'மாவட்ட வினாத்தாள் வேண்டாம். பொது வினாத்தாளை பின்பற்றுங்கள்' என உடன் முடிவு எடுத்தது. ஆனால் பள்ளிக் கல்வி அதிகாரிகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.


இதனால் மதுரையில் 6, 7, 8 ம் வகுப்பு படிக்கும் 90 தொடக்க பள்ளி மாணவர்கள் ஒரு வினாத்தாளிலும், 200க்கும் மேற்பட்ட உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு வினாத்தாளிலும் தேர்வு எழுதும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றனர்.


ஏன் இந்த குழப்பம்


கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் பின்பற்றுவதா, மாவட்ட வினாத்தாள் பின்பற்றுவதா என தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் உடன் முடிவு எடுக்கவில்லை. எஸ்.சி.இ.ஆர்.டி., வினாத்தாள் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.





1 comment:

Post Top Ad

Your Ad Spot