உருது பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் - Seithisudar

Friday, October 25, 2024

உருது பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

 



உருது பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.


எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


தமிழகத்தில் உருது மொழி வழி பள்ளிகள் குறைந்துவரும் நிலையில், அதனை மேலும் குறைக்கும் வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் 4 உருது பள்ளிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


உருது பள்ளிகளை இணைப்பது தொடர்பாக, இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் போடவேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு குடியாத்தம் வட்டார கல்வி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த முயற்சி உருது பள்ளிகளின் தடத்தை இல்லாமலாக்கிவிடும் சூழலை ஏற்படுத்தி விடும். ஆகவே, தமிழ்நாடு கல்வித்துறை உடனடியாக தலையிட்டு உருது பள்ளிகள் இணைப்பு முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில், தேவையான நிதியளிப்பு மற்றும் அரசுகளின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால் சிறப்பான முறையில் உருது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதுபோன்றதொரு நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு உருது பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், உருது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர், உதவியாளர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கவேண்டும். உருது பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot