தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கினார்.
தமிழகத்தில் உள்ள பிரபல யூடியூபர்களில் ஒருவர் இர்பான். இவர் உணவகங்களில் ரிவியூ வீடியோ போட்டு பிரபலம் ஆனவர். வெவ்வெறு அரசியல் கட்சி பிரபலங்களுடனும் தொடர்பில் இருப்பவர்.
இவர், தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தையின் பாலினத்தை வெளியிடுவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் சூழலில், அதனை மீறி இர்பான் தனது பாலினத்தை வெளியிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுகாதாரத்துறையின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, யூடியூபில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குவதுடன், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.அப்போதைக்கு தலையை ஆட்டி விட்டு வந்த இர்பான், மன்னிப்பு கோரும் வீடியோ எதுவும் வெளியிடவில்லை. பாலினம் அறிவித்த வீடியோவை மட்டும் நீக்கி விட்டு அமைதியாகி விட்டார். அரசு தரப்பிலும் அதை கண்டுகொள்ளவில்லை.
இந்த விவகாரம் நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' அந்த வீடியோவை நானும் பார்த்தேன். குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே அதனை வெட்ட வேண்டும். ஆபரேசன் தியேட்டருக்குள் இர்பான் மற்றும் கேமராமேன் என எத்தனை பேர் சென்றார்கள் என தெரியவில்லை. இதனால், நோய் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். விளம்பரத்திற்காக மருத்துவமனை நிர்வாகம் இப்படி செய்துள்ளது என நினைக்கிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' எனக் கூறினார். பாலினம் அறிவித்த தவறுக்கு மன்னிப்பு கேட்காதது பற்றியும் இர்பானிடம் விளக்கம் கேட்க உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ நீக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
No comments:
Post a Comment