ஓய்வூதிய இயக்குநரகம் மூடல்; தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை? - Seithisudar

Sunday, November 17, 2024

ஓய்வூதிய இயக்குநரகம் மூடல்; தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை?

 



ஓய்வூதிய இயக்குநரகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை, அரசு ஊழியர்களுக்கு செய்நன்றி கொன்ற திராவிட மாடல் அரசு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குநரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகியவை கலைக்கப்பட்டு, அவற்றின் தலைமைப் பதவிகள் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு கருவூலங்கள் கணக்குத் துறையுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஓய்வூதிய இயக்குநரகம் தான் கையாண்டு வந்தது. ஓய்வூதியர்களின் குறைகளை அறிய மாவட்டம் தோறும் குறைதீர்ப்புக் கூட்டங்களை இந்த அமைப்புத் தான் நடத்தி வந்தது. 


இப்போது இந்த அமைப்பு கலைக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கும் செய்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படாது என்பது தான். அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை இது மிகவும் கசப்பான செய்தி ஆகும்.


20 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த நிலை முற்றிலுமாக மாறி, மத்திய அரசே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.


தமிழ்நாட்டிலும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஓய்வூதிய இயக்குநரகம் தனி அமைப்பாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஆனால், ஓய்வூதிய இயக்குநரகம் மூடப்பட்டிருப்பது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.


தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குநரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றின் செயல் திறனை மேம்படுத்த, அத்துறைகள் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


அதன்படி அத்துறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மாற்றாக அத்துறைகளையே மூடியிருப்பது எத்தகைய சீர்திருத்தம் என்பது தெரியவில்லை. தலைவலி ஏற்பட்டால் தலையை வெட்டி எடுப்பது தான் அதற்கான மருத்துவம் என்பது எவ்வளவு பேதைமையானதோ, அவ்வளவு பேதைமையானது தான் தமிழக அரசின் நடவடிக்கையும்.


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததற்கு முதன்மைக் காரணம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஆனால், இப்போது அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது. 


அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ‘’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு’’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கு பொருள் என்ன? என்பதை 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு கற்பிப்பார்கள். இது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot