மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரனையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர், சிந்தாதரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனது 21 மகள் சற்று மனவளர்ச்சி குன்றியவர். தற்போது, அண்ணா சாலையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
எனது மகளின் நிலையை சாதகமாக்கி சிலர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதையடுத்து, போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். மேலும், அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகளின் அடிப்படையில், மாணவியின் தோழி அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அவரது நண்பர் திருவள்ளூரைச் சேர்ந்த நந்தனம் பகுதி கல்லூரி மாணவர் சுரேஷ், அவரது நண்பர் 12-ம் வகுப்பு பள்ளி மாணவன், கோயம்பேடு, அம்பத்தூர், திருத்தணி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் என 9 பேர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர் சுரேஷையும், பள்ளி மாணவனையும் நேற்று முன்தினம் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது: நந்தனம் கல்லூரியில் படிக்கும் சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் தோழியான அரக்கோணத்தை சேர்ந்த மாணவியை பார்க்க அடிக்கடி அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அப்போது, மனவளர்ச்சி குன்றிய மாணவியை, சுரேஷூக்கு அவரது தோழி அறிமுகம் செய்துள்ளார். அதன்பிறகு சுரேஷ், மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு அடிக்கடி வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியும், செல்போனில் பேசியும் பழகி வந்துள்ளார். மேலும், அந்த மாணவிக்கு சாக்லெட் பிடிக்கும் என்பதை அறிந்து, சாக்லெட் வாங்கி கொடுத்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சுரேஷ் அழைத்து சென்று கட்டாய பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மாணவியின் நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு, தனது நண்பர்களுடனும் பழக வைத்துள்ளார். அவர்களும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இது அந்த மாணவியின் தோழிக்கு தெரிந்தும், அதை தடுக்காமல் உதவி செய்து வந்துள்ளார். தனக்கு நடந்தது பெரும் கொடுமை என்பது கூட தெரியாமல் அந்த மாணவி அவர்களுடன் பழகி வந்துள்ளார். இது கடந்த ஓராண்டாக நடந்துள்ளது.
தற்போது, சுரேஷ் மற்றும் பள்ளி மாணவனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை வேண்டுகோள்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட வர் மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதால், புலன் விசாரணை செய்வது, விசாரணை அதிகாரிக்கு சவாலாக இருக்கிறது. இவ்வழக்கை பொதுவெளியில் விமர்சிப்பது, சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்துக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இவ்வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment