புத்தாண்டு கொண்டாட்டம் - கடும் கட்டுப்பாடுகள் - Seithisudar

Monday, December 30, 2024

புத்தாண்டு கொண்டாட்டம் - கடும் கட்டுப்பாடுகள்

 



புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நடசத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


2025-ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செய்து வருகின்றன. டிச. 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் ஜனவரி 1 அதிகாலை ஒரு மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு காவல் துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


வாகனங்கள் சோதனை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் துறை எடுத்துள்ள முக்கிய முடிவுகள்:


ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவுவாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.


வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் ஸ்திரத்தன்மைமையை உறுதி செய்ய பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.


நேரக் கட்டுப்பாடு கட்டாயம்: வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும்; சாலைகளில் எக் காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும், காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும். பெண் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும். வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


18,000 போலீஸாா்: இந்த விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனா். மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், ரிசாா்ட்டுகள் ஆகியவற்றில் மது அருந்தியவா்களை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்காமல், அவா்களை வீடுகளுக்கே கொண்டுவிடுவதற்கு வாகனங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நட்சத்திர ஹோட்டல்களை தவிா்த்து சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய பொது இடங்களிலும் மக்கள் புத்தாண்டை கொண்டாட்டம் நடைபெறும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.


கடலில் இறங்கத் தடை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகள், கிழக்கு கடற்கரைகள் ஆகியவற்றில் 31-ஆம் தேதி மாலை முதல் ஜனவரி காலை வரை கடலில் இறங்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இங்கு குதிரைப் படையினரும், கடலோரப் பாதுகாப்புக் குழும காவலா்களும் ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள்.


மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களையும், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவா்களையும் தடுக்க சோதனைக் குழு அமைக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 18,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.


புத்தாண்டு பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல தாம்பரம், ஆவடி மாநகர காவல் துறைகளிலும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: 400 இடங்களில் வாகன சோதனை


புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) இரவு 100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. 400 இடங்களில் வாகன சோதனை செய்யப்படுகிறது.


மயிலாப்பூா், அடையாறு, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகா், பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூா், அண்ணாநகா், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியில் இருந்து புதன்கிழமை (ஜன. 1) அதிகாலை வரை 400 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.


கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தை தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் மோட்டாா் சைக்கிளில் ரோந்து செல்கிறாா்கள்.


கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என 100 இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக்கூடிய ஏ.டி.வி. வாகனங்கள் மூலம் போலீஸாா் ரோந்து செல்கிறாா்கள்.


மெரீனாவில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள்.


சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக 10 ரோந்து வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்துகளைத் தவிா்ப்பதற்காக திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை 20 இடங்களில் சாலைத் தடுப்புகள் வைக்கப்படுகின்றன. சென்னையில் சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 500 இடங்களில் தடுப்புகள் வைக்கப்படுகின்றன.


புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களிடம் அத்துமீறினால், சம்பந்தப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் துறை முடிவு செய்துள்ளது.


கிழக்கு கடற்கரைச் சாலையில் கூடுதல் கண்காணிப்பு தேவை


சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பங்களாக்களில் அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூா், உத்தண்டி,


கானத்தூா், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை ஆகிய பகுதிகளில் கடற்கரையையொட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்கள் பெரும்பாலானவை நீச்சல்குளம், உள்ளரங்கம் ஆகியவற்றுடன் உள்ளன. இந்த பங்களாக்கள் நாள் வாடகைக்கும் விடப்படுகின்றன. இவற்றை சிலா் வாடகைக்கு எடுத்து புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.


ரிசாா்ட்டுகள், நட்சத்திர விடுதிகள், பங்களாக்கள் ஆகியவற்றில் புத்தாண்டு நடத்துவதற்கு காவல் துறை சாா்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை 16 விதிமுறைகளைப் பின்பற்றி காவல் துறை வழங்குகிறது. இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டிருந்தாலும் காவல் துறை அனுமதி வழங்குவதில்லை. அனுமதியின்றி எந்த ரிசாா்ட்டிலும் புத்தாண்டு நிகழ்ச்சியை யாரும் நடத்த முடியாது.


ஆனால், கிழக்கு கடற்கரைச் சாலையில் பல பங்களாக்களில் காவல் துறையின் உரிய அனுமதி பெறாமலேயே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் கூறுகின்றனா். முக்கியமாக சென்னை பெருநகர காவல் துறையின் எல்லையில் அமைந்துள்ள கானத்தூா், முட்டுக்காடு, திருவிடந்தை, கோவளம் ஆகிய பகுதிகளிலேயே அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.


ஆண்டுதோறும் அனுமதியின்றி நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தால் இப் பகுதியின் அமைதி பாதிக்கப்படுவதோடு, அண்மைக்காலமாக அடிதடி, கலாட்டாக்களும் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இப்பகுதிகளில் காவல் துறையினா் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot