சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையிலும், அதனை சுற்றி பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி வேலை செய்யாதது, வெளி நபர் எப்படி உள்ளே வந்தார், இவருக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த அன்றே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்" என்று X தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
"அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்டைக் கேட்பது?
நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும் அரணாகவும்.
எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" என்று கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார். கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு X தளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய் முதல் முறையாக கடிதம் எழுதி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
No comments:
Post a Comment