ஆசிரியர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தங்கள் பணிகளை செய்து கொண்டே இருந்தால், அதற்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும்'' என கல்வியாளர் புகழேந்தி பேசினார்.
புதுச்சேரியில் நடந்த 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் கல்வியாளர் புகழேந்தி பேசியதாவது:
சமூக பொறுப்பு, சம்பளம் என பல கனவுகளுடன் ஆசிரியர் பணியில் நுழைந்திருப்போம். ஆசிரியர் பணியில் அடியெடுத்து வைத்தது முதல் சுறுசுறுப்பாக வேலை செய்து இருப்போம்.
ஆனால் கூடவே பணியில் இருக்கும் சில ஆசிரியர்களே, 'என்ன வேலைக்கு புதுசா.. நாங்களும் இப்படி தான் இருந்தோம்' என்று கேட்டு இருப்பர். இன்னும் சிலரோ, இவர் என்ன புதுசா பண்ணிட போகிறார் என்று பின்னாடியும் பேசி இருப்பர். இந்த ஏச்சு-பேச்சுகளை தாண்டி தான் லட்சிய ஆசிரியர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட லட்சிய பணியை மேற்கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் பணியில் சிலர் விரும்பி சேர்ந்து இருப்பர்.
சிலர் தற்செயலாக வந்திருப்பர். எப்படி இருந்தாலும், நம்மை தினமும் தெறிக்க விட்ட மாணவர்களும் நம் வளச்சிக்கு ஒரு காரணம். ஒவ்வொரு நாளும் புதுவிதமான பிரச்னைகளை கொண்டு வந்து, நம்மை மெருகேற்றி இருப்பர். அவர்கள் இல்லையெனில் நம்முடைய வளர்ச்சியும் இல்லை.
வகுப்பறை என்பது ஆசிரியர் - மாணவர் கலந்துரையாடலுடன் கலகலப்பாக இருக்க வேண்டும். ஆனால் வகுப்பறைகளில் இன்று கலந்துரையாடல் இல்லை. மாணவர்களுக்குள் விவாதம்தான் நடக்கின்றது.
வகுப்பறை மிகவும் அழகானது. ஆனால் வகுப்பு எடுப்பது இன்றைக்கு ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.
ஒரு மாணவனை திட்டிவிட்டு அமைதியாக ஆசிரியர்கள் இருந்துவிட முடியாது. மறுநாள் அம்மாணவன் வகுப்புக்கு வரும் வரை 'திக் திக்' என இருக்கும். அடுத்தநாளே பெரிய கும்பல் வந்து கேள்வி கேட்கும்.
இந்த சவால்களை சந்தித்து தான் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கின்றனர்.
யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும், லட்சிய ஆசிரியர்கள் கவலைப்படாமல் தங்களது பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களைப் போன்ற லட்சிய ஆசிரியர்களை அடையாளம் காட்டுங்கள்.
என்றாவது ஒருநாள் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தே தீரும். உங்களது வெற்றிக்காக ஏங்கும் உறவுகள் அதை கொண்டாடியே தீரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment