TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் - நயினார் நாகேந்திரன் - Seithisudar

Wednesday, April 30, 2025

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் - நயினார் நாகேந்திரன்

 



தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-


பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்ற கனவுகளுடன் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு ஆணையம் (TRB) நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் வேலை கிடைக்காமல் வேதனையில் இருக்கிறார்கள். நியாயமாக கிடைக்க வேண்டிய ஆசிரியர் பணி அமையாமல் போனதால் தி.மு.க. அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்திய இவர்களில் பலர் 50 வயதைக் கடந்தும் இன்னும் ஆசிரியர் பணி கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் (வாக்குறுதி எண் 177) என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்கிய தி.மு.க. அரசு வழக்கம்போல தங்களின் தேர்தல் வாக்குறுதியை மறந்ததும், மறுத்ததும், இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.


தங்கள் வாக்குறுதியை இதுநாள் வரை நிறைவேற்றாத ஆளும் தி.மு.க. அரசு, ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் 2023-2024ம் ஆண்டு அறிக்கையில் அறிவித்த 6,553 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. இவ்வாறு காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் நிரப்பாமல் ஆசிரியப் பெருமக்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருவது ஆசிரியர்களை மட்டுமல்ல மாணவர்களின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கும்.


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு உரிய பணி நியமனங்களை தி.மு.க. அரசால் வழங்க முடியவில்லை என்றால், பிறகு எதற்காக ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் சார்பாக தேர்வுகள் நடத்த வேண்டும்? அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரவு பகலாகப் படித்து தேர்வெழுதும் பெரும்பாலான இளைஞர்களின் நேரத்தையும் நம்பிக்கையையும் வீணாக்குவதற்காகவா?


ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் தமிழகத்தின் அரசுப்பள்ளி மாணவர்கள் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், ஆரம்பக் கல்வியின் ஆணிவேராகத் திகழும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் பணி நியமனம் வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது, நமது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும், கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இனியாவது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.


.மு.க. ஆட்சி நான்கு ஆண்டுகளைக் கடந்த நிலையில், நாட்டிற்கு நன்மை கொடுக்கும் இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்த எதற்காக நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.


ஆகவே ஆசிரியர் தேர்வு மையத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கி அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் வழங்க வழிவகை செய்ய வேண்டுமென தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot