மாமியார் - மருமகள் சண்டையில் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் வசூலிக்க உத்தரவிட்டுள்ள மனித உரிமை ஆணையம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.
சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சகாய பிர்வீன். ஐ.டி நிறுவன அதிகாரியான இவர், மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த புகார் மனுவில், 'குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி மேரி மெர்சியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். மனைவியின் உறவினரான, செங்கல்பட்டு நகர காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ஆண்டனி ஸ்டாலின் தூண்டுதலின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுமதி, கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்தார்.
அங்கு, தனது தாய் பெயரில் உள்ள வீட்டின் சாவியை வலுக்கட்டாயமாக தங்களிடம் இருந்து பறித்து, மனைவியிடம் கொடுத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டார். இதில், நாங்கள் சாவியை ஒப்படைக்க மறுத்தபோது, தன்னை மனைவி குடும்பத்தினர் முன்னிலையில் அடித்து, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தினார். எனவே, அந்த பெண் ஆய்வாளர் சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், பெண் ஆய்வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதால், பாதிக்கப்பட்ட சகாய பிர்வீனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இத்தொகையை பெண் ஆய்வாளர் சுமதியிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்ட ஆணையம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment