அகவிலைப்படி உயர்வு என்பது சாதாரணமானது, சாதனை அறிவிப்பு இல்லை என்று அரசு ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்காக நேற்று முன் தினம் (ஏப்ரல் 28) 9 அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதாவது, அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் உயர்வு, ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் உயர்வு, அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் உயர்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கடன் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
9 அறிவிப்புகளில் 4 அறிவிப்புகள் கடன் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பானது. இதனால் எங்களுக்கு கடன்சுமைதான் அதிகரிக்குமே தவிர எந்த பலனும் இல்லை. நாங்கள் கேட்ட கோரிக்கைகளே முதல்வரின் அறிவிப்பில் இடம் பெறவில்லை என்று அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதேசமயம் அரசு ஊழியர்கள் முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்று நன்றி தெரிவித்ததாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி சொன்ன எந்த ஒரு சங்கமும் முன்பணத்தை உயர்த்த வலியுறுத்தவில்லை. முன்பணத்திற்காக போராடவில்லை என்று அரசு ஊழியர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர், “ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் 1.4.26 முதல் அதாவது ஒராண்டு கழித்து வழங்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்தார். அனால் ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் 1.10.25 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
நாங்கள் 1.4.25 முதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
12 மாதங்களுக்கு பின்னர் ஒப்படைப்பு விடுப்பு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்த அறிவிப்பில், EL விடுப்பு ஊதியம் என்பதை 6 மாதங்கள் கழித்து அதாவது 1.10.25 முதல் ஒப்படைப்பு ஊதியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது, இரு கோடு தத்துவ அணுகுமுறை, இப்படி நடப்பது முதல் முறை அல்ல.
அதோடு நிலுவைக் கோரிக்கைகளுக்கு நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப புது அறிவிப்புடன், புது பிரச்சனைகளை திமுக தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30 க்குள் அறிக்கை சமர்பிக்கும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என 3 திட்டங்களில் தமிழகத்திற்கு எந்த திட்டம் பொருத்தமானது என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 பேர் கொண்ட அலுவலர் குழு அமைக்கப்படும். அக்குழு ஒன்பது மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று பிப்ரவரி 25ல் தமிழக அரசு அறிவித்தது.
ஒன்பது மாதங்களில் என்றால் அக்டோபர் 25க்குள் அறிக்கை சமர்பிக்கப்படும்.
ஓய்வூதியம் தொடர்பாக அலுவலர் குழு அமைப்பது திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு எதிரானது. இது காலம் கடத்தும் நடவடிக்கை.
திமுக தனது தேர்தல் அறிக்கையில்., திமுக ஆட்சிக்கு வந்தால் குழு அமைத்து குழுவின் அறிக்கை அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை.
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றே வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் ஸ்டாலின் வாக்குறுதி எண்: 309ஐ தான் வலியுறுத்திப் பேசினார். TN குழு அமைப்பது மோசடி செயல். கொள்கை ரீதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்..
ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.500 /- லிருந்து ரூ. 1000/- ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறார். போனஸ் சட்டப்படி தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு மாத ஊதியம் ரூ.7000/- போனசாக வழங்க வேண்டும்.
A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு வழங்கி வந்த கருணைத் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனப் படுத்தி வருகிறது திமுக அரசு,
மகப்பேறு விடுப்புக் காலம் தகுதிகான் பருவத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகப்பேறு விடுப்புக் காலத்தை தகுதிகாண் பருவத்திற்கு இணைத்துக் கொள்ள மறுத்ததால், பதவி உயர்வு பறிபோன பல்வேறு துறை சார்ந்த பெண் அரசு ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு அமுல்படுத்தாமல் கால தாமதம் செய்து வந்தது.
சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் தொடர்ந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் மகப்பேறு விடுப்புக் காலத்தை தகுதிகாண் பருவத்திற்கு எடுத்து பதவி உயர்வு வழங்க உத்திரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தவே இந்த அறிவிப்பு.
2% அகவிலைப்படி உயர்வு என்பது வழக்கமாக நிர்வாக ரீதியாக அறிவிக்க வேண்டிய அறிவிப்பு. ஏப்ரல் முதல் வாரம் அறிவித்து இருக்க வேண்டியது. சாதனை அறிவிப்பாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள். முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. இதில் நன்றி வேறு” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரயர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை.
ReplyDeleteஎவ்வளவு கொடுத்தாலும் போதாது ஏன்ற மனநிலையில் உள்ளவர்கள்
அரசியல் காரணங்களுக்காக மதவெறி கொண்டு திமுக வை எதிர்க்கும் ஆசிரியர் ஆசிரிய அரசூழிய சங்கங்கள் மட்டும் தான் நடிக்கிறார்கள்
ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்