பள்ளிக் கல்வித் துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி உடன் ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளின் பல்வேறு பகுதிகளை பார்த்து ரசித்தனர்.
சட்டப் பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் உலக அளவிலும், மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்றப் போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாகத் தேர்ந்தேடுக்கப்பட்டனர். இவர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்குச் சென்றனர்.
அதே போல, 2023-2024 ஆம் ஆண்டு, 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவில் மன்றச் செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் ஹாங்காங் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர், 42 மாணவர்கள், 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரும் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 52 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர், அலுவலர்கள் என 56 நபர்கள் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜெர்மனியில் ஒரு பயணம்:
இந்த நிலையில், தற்போது 22 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர், அலுவலர்கள் என மொத்தம் 24 நபர்கள் ஜெர்மனி நாட்டிற்கு கடந்த 24 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி சென்றுள்ளார்.
இதில், ஜெர்மனி நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற BMW தொழில்நுட்ப அருங்காட்சியகத்திற்கு மாணவர்கள் சென்றனர். அங்கு ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலும் வாகன வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியினையும் பற்றிய புரிதலை மாணவர்கள் கண்டு அனுபவங்களை பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் உள்ள பழம்பெரும் அருங்காட்சியகத்தை அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து அமைச்சர் பார்வையிட்டுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து ஆஸ்திரியாவின் இன்ஸ்புரூக் நகரத்திற்கு 2 மணி நேர சாலை வழி பயணமாக வந்தடைந்த மாணவ, மாணவிகள், ஸ்வரோஸ்கி படிக அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். மேலும் இன்ஸ்ப்ரூக் நகர மையத்தில் இத்தாலிய சம வயது உடைய மாணவர்களுடன் ஒன்றாக சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment