அரசு பள்ளி ஆங்கில வழி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உட்பட அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளி ஆங்கிலவழி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு உட்பட 21 இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில் உதவிபெறும் பள்ளிகளுக்கும் பெரும்பாலான நலத்திட்டங்கள் கிடைக்கின்றன. நீட் தேர்வுக்கான பயிற்சிக்கும் உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மருத்துவபடிப்புகளுக்கான 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு அரசு மாணவர்களுக்கு உள்ளது போல் 2.5 சதவீதம் தனி ஒதுக்கீடு உதவிபெறும் மாணவர்களுக்கும் வழங்க தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.
இதுபோல் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் அப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகம் உட்பட நலத்திட்டங்கள் வழங்கப்படும் நிலையில், உதவி பெறும் பள்ளிகளில் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதில் பாரபட்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் நிர்ணயித்திலும் இப்பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் 'உபரி' (சர்பிளஸ்) ஆசிரியர் பிரச்னையால் உதவிபெறும் பள்ளிகள் பாதிக்கின்றன.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனபால் ஜெயராஜ் கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான அரசாணையில் (148) ஆங்கில வழி மாணவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். 2019 - 2020 வரை நடைமுறையில் இருந்தது. சில உதவிபெறும் பள்ளிகளில் 2019க்கு முன் துவங்கப்பட்ட ஆங்கில வழி வகுப்புகளுக்கு மட்டும் இன்னும் நலத்திட்டங்கள் கிடைக்கின்றன.
இதனால் ஒரே பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைத்தும், சிலருக்கு கிடைக்காத சூழ்நிலையும் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் ஆடிட் அப்ஜெக் ஷன் உள்ளிட்ட சில காரணங்களை கூறுகின்றனர். இந்தாண்டாவது உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து மாணவருக்கும் நலத்திட்டங்கள் கிடைக்கவும், ஆசிரியர் - மாணவர் நிர்ணயத்தில் ஆங்கில வழி மாணவர்களையும் கணக்கில்கொள்ளவும் அரசு நடவடிக்கை வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment