அரசு போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஆறு சதவீத உயர்வு என்பதால், குறைந்தபட்சம் 1,420 ரூபாய் முதல் 6,460 ரூபாய் வரை, ஊழியர் சம்பளம் உயரும்.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நடந்தப்பட்ட இரண்டு கட்டப் பேச்சில் எந்த முடிவும் எட்டவில்லை. மூன்றாம் கட்ட முத்தரப்பு பேச்சு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை, குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், நேற்று நடந்தது.
போக்குவரத்து துறை செயலர் பனீந்திர ரெட்டி, அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் பிரபுசங்கர், இளங்கோவன், பொன்முடி மற்றும் தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட, 86 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 8:00 மணி வரை நடந்த பேச்சில், ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் கையெழுத்தானது. தி.மு.க.,வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி., மற்றும் எச்.எம்.எஸ்., உட்பட, 45க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன.
6 சதவீதம் உயர்வு
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் என, 1.09 லட்சம் பேருக்கு, அடிப்படை சம்பளத்தில், ஆறு சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்தபட்சம் 1,420 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக, 6,460 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து கணக்கிட்டு, இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், இப்புதிய ஒப்பந்தத்தால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு 319.50 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநடப்பு
இதற்கிடையே, இந்த பேச்சில் அதிருப்தி தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் அ.தி.மு.க.,வின் அ.தொ.பே., உட்பட, 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:
ஊதிய ஒப்பந்த பேச்சில், ஆறு சதவீத ஊதிய ஊயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளனர். 12 மாத நிலுவை தொகை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. 2023 செப்., மாதத்தில் இருந்து கணக்கீடு செய்து, நிலுவை வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் பஞ்சப்படி தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தினோம்; அதற்கு சரியான பதில் இல்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, 22 மாதங்களாக எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால் பேச்சை புறக்கணித்துள்ளோம்.
அடுத்த நடவடிக்கை குறித்து, எங்களுக்குள் கலந்து பேசி முடிவு அறிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment