நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர காவல் கிழக்கு மாவட்ட துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் கலந்து கொண்டு பேசியதாவது:
‘ஆண்ட பரம்பரை’ என்று யாருமில்லை. காலங்காலமாக தங்களை ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொண்டிருந்த பலர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். மாறாக, யார் ஒருவர் கடினமாக உழைத்து, நன்றாகப் படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் அமர்கிறார்களோ, அவர்களே இன்றைய சமுதாயத்தில் உண்மையான ‘ஆண்ட பரம்பரை’யாக மதிக்கப்படுவார்கள்.
ஒருவர் பெருமையாக நினைக்க வேண்டியது எதுவென்றால் தனது தாத்தா மாவட்ட ஆட்சியராகவும், காவல்துறை அதிகாரியாகவும் இருந்ததை பெருமையுடன் குறிப்பிடலாம்.
ஆனால், அந்தப் பெருமை என்பது கடந்த காலத்தின் அடையாளம் மட்டுமே. இனிவரும் காலங்களில் யார் சொந்த முயற்சியால் உயர் பதவிகளை அடைகிறார்களோ அவர்களே உண்மையான பெருமைக்குரியவர்களாகவும், சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகவும் கருதப்படுவார்கள்.
வெறும் பழம் பெருமைகளை பேசிக்கொண்டும், முன்னோர் சம்பாதித்த சொத்துகளை வைத்துக்கொண்டு ‘இது என்னுடையது’ என்று கூறிக்கொண்டு திரிவது இன்றைய காலகட்டத்தில் எந்தவிதமான மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தராது.
ஒவ்வொரு இளைஞனும் தனது சொந்தக்காலில் நிற்கவும், தனது சொந்த முயற்சியால் முன்னேறவும் வேண்டும். எனவே, மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment