கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சற்று குறைந்தே காணப்படுவதாக, பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள, அரசு பள்ளிகளில், வரும் கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், 5, 8 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க, ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் நிலையில், அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில், அதே பள்ளியில் பயில விருப்பம் தெரிவிக்கும் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, பிளஸ் 1 வகுப்பில் 'அட்மிஷன்' அளிக்கப்படுகிறது.
இருப்பினும், கிராமப்புற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சற்று குறைந்தே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து மக்களிடையே நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், கிராமப்புற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சற்று குறைந்தே காணப்படுகிறது.
இதற்கு, கிராமங்களில் உள்ள துவக்கப் பள்ளிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ளதே காரணமாகும். அதேநேரம், நகர்ப்புறங்களில் உள்ள பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கத்துக்கு மாறாக, அதிகரித்தும் வருகிறது.
இவ்வாறு, கூறினர்.
No comments:
Post a Comment