இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - டிடிவி வலியுறுத்தல் - Seithisudar

Tuesday, May 20, 2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - டிடிவி வலியுறுத்தல்

 



இடைநிலை ஆசிரியர்களுக்கு சிக்கல் இ்ல்லாமல் ஊதிய உயர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊதியக் குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வுபெற 10 ஆண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.


இடைநிலை ஆசிரியர்களின் ஒவ்வொரு போராட்டத்தின்போதும், அவர்களை அழைத்து பேசுவதும், பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைப்பதும் என எந்தவித தீர்வையும் காணாமல் தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் திமுக அரசு இழைக்கும் அநீதி ஆகும்.


எனவே, ஆண்டு ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், ஆண்டுக்கணக்காக போராடி வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தினகரன் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot