POCSO - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை! - Seithisudar

Wednesday, May 7, 2025

POCSO - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!

 



தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்சோ வழக்குகளில் சிக்கினால் 4 நாட்களில் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. 


சமீபநாட்களாக தமிழகத்தில்  பள்ளிகளில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வேலியே பயிரை மேயும் கதையாக ஒருசில ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமைகளும் நடந்திருக்கின்றன.


இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறை மாணவிகளின் நலன் கருதி முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


அதன்படி, தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இப்புகார்கள் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  ஒரு முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார். இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும்,  “பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் இக்கல்வியாண்டில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்திற்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதி செய்திட வேண்டும். அதன்பின்னர் 6 மாதத்திற்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.


மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில், பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.


 விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணிய இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.


விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதிக்குள் வெளி நபர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மேலும், விடுதி பராமரிப்புப் பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.


பள்ளிகளில், அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.


பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.”மாணவர் மனசு” புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு. அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக்கூடாது என்பது முக்கியமாகையால், அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது.


இதுதவிர சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ/மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


1 comment:

Post Top Ad

Your Ad Spot