தமிழகத்தில் தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில், தற்காலிக நியமனம் மற்றும் பணி நிரவல் முறையில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 19 ஆயிரத்து, 260 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோரை நியமிப்பது வழக்கம். ஆனால், 2013 முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
இதையறிந்த தி.மு.க., 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில், வாக்குறுதி எண்: 177ல் '2013 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வெழுதி, இன்னும் வேலைவாய்ப்பு பெறாதவர்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகும் மூன்று ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் இருந்தது. 2024ல் சட்டசபை கூட்டத்தொடரில், 110வது விதியின் கீழ், '2026 ஜனவரிக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இச்சூழலில், பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு தொடக்கக் கல்வித்துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது, தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், 'ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 முதல் 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் தகுதித் தேர்வுகளை மட்டுமே நடத்தி வந்தது. இதுவரை காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. 12 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உருவாகியுள்ளன. தற்போது, 2,768 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது, மிக சொற்பமானவை. தற்காலிக மற்றும் பணி நிரவல் நியமன முறைகளை தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கும் வகையில், அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment