திருக்குறள் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கை - கவர்னர் ரவி - Seithisudar

Tuesday, June 10, 2025

திருக்குறள் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கை - கவர்னர் ரவி

 




''திருக்குறளில் உள்ள கல்வி சிந்தனைகளை அடிப்படையாக வைத்து, தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,'' என, கவர்னர் ரவி பேசினார்.


திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது.


விழாவில் தேனி வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்தா ஆஸ்ரமம், சுவாமி ஞான சிவானந்தாவிற்கு, தமிழாகரர் சாமி தியாகராஜன் நினைவு விருதை, கவர்னர் ரவி வழங்கி பேசியதாவது:


மாநில அரசு, 1970ல் திருவள்ளுவர் தினத்தை, ஜனவரி 15க்கு மாற்றியது. கிரிகோரியன் நாட்காட்டி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டி 16ம் நுாற்றாண்டில் தான் வந்தது. திருவள்ளுவர் 2,000 வருடங்களுக்கு முன்பு தோன்றியவர். பாரதத்தில் தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரம் அடிப்படையில் தான் தேதி குறிப்போம்.


இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளது. ஆனால், இதை பின்பற்றவில்லை. தமிழ் பஞ்சாங்க அடிப்படையிலும் தேதி குறிக்கவில்லை. வைகாசி அனுஷம் தான், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.


திருவள்ளுவர், திருமூலர், திருஞான சம்மந்தர், அப்பர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள் என பலர் தோன்றியதால், நாம் இருப்பது புண்ணிய பூமி. இங்கு தோன்றிய நான்கு ரிஷிகள், சனாதன தர்மத்தை பாரதம் முழுதும் பரப்பினர். திருவள்ளுவர் பிரபஞ்சத்தின் ஒலியாக இருக்கிறார்; அவர் எழுதிய 1330 குறளும் கடல் போன்றது, வாழ்வில் எந்த சூழல் ஏற்பட்டாலும், அவை உறுதுணையாக நிற்கும்.


எனவே, திருக்குறள் ஒரு அழகிய தர்ம சாஸ்திரம். உயர் கல்வி படிக்கும் போது, திருக்குறனை படித்துள்ளேன் அதன் ஆழம் போக போக புரிந்தது. சனாதன தர்மம் நாம் ஒரே குடும்பம் என்கிறது. பிரதமர் மோடி திருவள்ளுவரின் பெரிய பக்தர். அவர் தனது உரையில், பெரும்பாலும் திருக்குறளை சுட்டிக்காட்டுவார். ஐ.நா., சபையிலும் திருக்குறள் பேசினார். சிங்கப்பூர் பேன்ற பல நாடுகளில் இதற்காக மையங்கள் நிறுவியுள்ளார். பிரதமரின் கொள்கையிலும், திருவள்ளுவர் இருக்கிறார்.


ஆங்கிலேயர் விட்டு சென்ற, அதே கல்வி முறையை, 70 ஆண்டுகளுக்கு பின்னும் நாம் பின்பற்றினோம். இதனால் மாணவர்களுக்கு புத்தக அறிவு மட்டுமே இருந்து வந்தது. மாணவர்களுக்கு தேவையான அறிவை வழங்கவே, தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது திருக்குறளில் உள்ள கல்வி சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில், முன்னாள் தொல்லியல் துறை ஆய்வாளர் கல்வெட்டு ராமசந்திரன், சமஸ்கிருத பேராசிரியர் ராமசந்திரன், எழுத்தாளர் பத்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot