அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், எஸ்.எம்.சி., எனப்படும், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தற்காலிக ஆசிரியர் நியமிக்கும் முறையில், அரசியல் குறுக்கீடுகளால் திறமையானவர்களை தேர்வு செய்ய முடியவில்லை என தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பொதுத் தேர்வுகள் தேர்ச்சி முடிவில், பாடம் வாரியாக தோல்வி குறித்து ஆய்வு செய்ததில் பல்வேறு பள்ளிகளில் சப்ஜெக்ட் ஆசிரியர்கள் இல்லாததால் தோல்வி அதிகரிப்பும், தேர்ச்சி பாதிப்பும் ஏற்பட்டது தெரியவந்தது.
மதுரை தும்மக்குண்டு கள்ளர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழாசிரியர் இல்லாததால், பிற பாடங்களில் தேர்ச்சி பெற்றும், தமிழ் பாடத்தில் மட்டும் 9 பேர் தோல்வியடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற சம்பவங்களால் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக, பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு வாயிலாக நிரந்தரமாக நிரப்பும் வரை, எஸ்.எம்.சி., வாயிலாக தொகுப்பூதியத்தில் நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி இடைநிலை ஆசிரியர் ரூ.12,000, பட்டதாரி ஆசிரியர் ரூ.15,000, முதுகலை ஆசிரியர் ரூ.18,000 என்ற மதிப்பூதியம் சம்பளத்தின் அடிப்படையில் நியமிக்கும் பணிகள் நடக்கின்றன.
இதற்காக ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கி, முதற்கட்டமாக 2025 ஜூலை வரை 38 கல்வி மாவட்டங்களுக்கு ரூ.27.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை நியமிக்கும் எஸ்.எம்.சி.,யில் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக உள்ளனர்.
இதனால் உறவினர், அரசியல் சிபாரிசு அடிப்படையில் நியமனம் நடப்பதாகவும், திறமை உள்ளோர் புறக்கணிக்கப்படுதாகவும் தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
எஸ்.எம்.சி.,யில் தலைவர் உட்பட 24 பேர் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள, பெரிய பள்ளிகளில் பெரும்பாலும் ஆளுங்கட்சி ஆசியுடன் தான் தலைவர், முக்கிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே பள்ளிகளுக்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்கள் தலைமையிலான குழு பரிசீலித்து திறமையானவர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
இதனால் அரசியல் தலையீடு குறையும் என்றனர்.
தென்மாவட்டங்கள் புறக்கணிப்பா?
மாநில அளவில் 38 கல்வி மாவட்டங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் கல்வி மாவட்டங்கள் இடம் பெறவில்லை. மதுரையில், 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் மற்ற தென் மாவட்டங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. ஆனாலும் அதற்கான நிதி ஒதுக்கவில்லை. இதனால் இம்மாவட்டங்களில் தற்காலிக நியமனம் நடக்குமா, உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் நிரவல் செய்யப்படுவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment