ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள் - எடப்பாடி பழனிசாமி - Seithisudar

Wednesday, June 4, 2025

ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள் - எடப்பாடி பழனிசாமி

 




உயர்கல்வி மற்றும் துணை வேந்தர்கள் பதவிகள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படாத திமுக ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., எச்சரித்துள்ளார்.


அவரது அறிக்கை:


துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. 


தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.


நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்சினைகளால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம்/ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. 


மகளிர் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் 6 மாதங்களுக்குமேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.


தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியப் பெருமக்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன்.


இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


1 comment:

Post Top Ad

Your Ad Spot