இறுக்கமான மேல்சட்டை, முக்கால் கால் அளவுக்கு பேன்ட்ஸ், ஒருபக்கமாக சரியும் தலைமுடி, புருவங்களில் சில கோடுகள், கையில் ஸ்மார்ட் வாட்ச், போன், காதில் ப்ளூடூத்... இதெல்லாம் புதிய பட ஹீரோவின் அறிமுகம் அல்ல. பெரும்பாலான பள்ளி மாணவர்களின் இன்றைய புறத்தோற்றம்தான் இது!
கண்டுகொள்ளாத பெற்றோர்
பள்ளிக்கூடங்களின் கடமை, பாடம் எடுப்பது, மதிப்பெண்கள் வாங்க வைப்பது மட்டுமே என்பது, இன்றைய பெற்றோர்களின் மனநிலையாக மாறிவிட்டது.
கல்வியையும், ஒழுக்கத்தையும் தனித்தனியாக பிரித்து பார்க்கும், நவீன சிந்தனையாளர்களாக, பெற்றோர் எதிர்தரப்பில் நிற்பதால் தான், மாணவர்கள் மீது எந்த தார்மிக உரிமையையும், ஆசிரியர்களால் எடுக்க முடிவதில்லை.
இதன் விளைவு, டீன் ஏஜ் பருவத்தின் துவக்கத்தில் உள்ள மாணவர்களே, புகைப்பிடிப்பதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
இறுக்கமான சீருடை, பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கும் ஹேர்ஸ்டைலுடன் எப்படி, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல, பெற்றோர் அனுமதிக்கிறார்கள் என்பதுதான், பலரது கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
காலம் மாறிவிட்டது என்ற சொல்லாடல், நம் தாத்தா, அப்பா காலத்தில் இருந்து, நம் தலைமுறைக்கு பிறகும் தொடரும். தற்போது மீடியாக்களின் தாக்கம் அதிகமாக இருப்பது, இச்சீரழிவுக்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால், பள்ளிக்கூட நடைமுறையும், பெற்றோரின் மனநிலையும் மாறிவிட்டது தான் முக்கிய காரணம். எண்ணெய் வைத்து படிய தலைசீவி, அழுக்கில்லாத சீருடையுடன், மாணவர்கள் வளாகத்திற்கு நுழைகிறார்களா என, கண்காணிக்கும் பொறுப்பு, உடற்கல்வி ஆசிரியரிடம் இருக்கும்.
விளையாட்டிற்கு விதிமுறைகள் இருப்பது போல, வாழ்வியல் விதிமுறைகளை சொல்லி கொடுத்தவர் கைகளில் இருந்த, பிரம்பு இப்போது இல்லை. பல பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பே நடப்பதில்லை.
நன்னெறி வகுப்பு, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவது, பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிப்பது, பள்ளி வளாகத்திற்குள் விதிமுறைகளை கடுமையாக்குவது என, சில நடைமுறைகள் கொண்டு வந்தால் தான், மாணவ சமுதாயத்தின் சீரழிவை குறைக்கவும், தடுக்கவும் முடியும்.
இச்சீரழிவுக்கு பின்னணியில், பெற்றோர், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களின் பங்களிப்பும் இருப்பதை உணராத வரை, அறிவுசார்ந்த சமுதாயம் உருவாக்க முடியாது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பெற்றோர் கேள்வி ஆசிரியர்கள் மவுனம்
என் குழந்தையை அடிக்க என்ன உரிமை இருக்கிறது என பெற்றோர் எதிர்தரப்பில் இருந்து கேள்வி எழுப்புகின்றனர். மாணவரை அடித்தால் அதற்கான காரணத்தை கூட கேட்காமல், சஸ்பெண்ட் செய்வது தொடரும்வரை, ஆசிரியர்களால் வேடிக்கை பார்க்கத்தான் முடியும். பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பு, மதிப்பெண் வாங்க வைப்பதை தாண்டி, ஒழுக்கமுள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் அடங்கியிருக்கிறது என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
-சதீஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம்
No comments:
Post a Comment