தமிழகத்தில் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்யாத 145 கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப, தொடக்கக்கல்வி டிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மாணவர்களை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கவும், அன்றாட வகுப்பறை கற்றல்-கற்பித்தல் பணிகள் தொய்வின்றி நடக்கிறதா என்பதை அறியவும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவற்றை முழுமையாக பார்வையிட்டும், ஆண்டாய்வு செய்தும் எமிஸ் தளம் வாயிலாக அறிக்கை அனுப்ப வேண்டும். இதனிடையே கடந்த மாதத்திற்கென, தொடக்கக்கல்வித்துறையைச் சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த மாதம் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்யாத 145 கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அவர்களின் விளக்கத்தை அறிக்கையாக அனுப்பவும், தொடக்கக்கல்வி டிஇஓக்களுக்கு, இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் பல மாவட்டங்களை சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் 12க்கும் குறைவான பள்ளிகளையே பார்வை செய்துள்ளது தெரியவந்தது.
மாணவர்களின் நலன், பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், கல்வித்திறனை மேம்படுத்திடவும் பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் பள்ளிகள் பார்வை மிகவும் அவசியமாகிறது. எனவே, கடந்த மாதம் 12க்கும் குறைவான பள்ளிகளை பார்வையிட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களின் பெயர் பட்டியல், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கத்தினை, அடுத்த 7 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிவைக்கும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களில், யாரேனும் ஓய்வு அல்லது மாறுதல் பெற்று இருப்பின் அவர்களின் பெயர்களை தவிர்த்து மற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து மட்டும் விளக்கம் பெற்று அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment