திருவண்ணாமலையில், அனைத்து துறை அலுவவர்களுடன், அரசு திட்டப்பணிகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம், நேற்று துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம் துவங்கியதுமே, “ஆரணி, வந்தவாசி பகுதியில்தான், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கான காரணம் என்ன?'' என, துணை முதல்வர் கேள்வி எழுப்பினார்.
பதில் அளித்த அதிகாரிகள், 'சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரமற்ற முறையில் கல்வி கற்பிக்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு சென்ற பின்பும், ஆசிரியர்கள் சரிவர கல்வி கற்பிப்பதில்லை. இதனால் தான், மாணவர்கள் கல்வித் தரம் பாதித்துள்ளது இப்படிப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும் பணி நடக்கிறது' என்றனர்.
அடுத்து, 'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தமிழ் பாடத்தில் மட்டும் எத்தனை பேர், கடந்த ஆண்டு தோல்வியுற்றுள்ளனர்' என, துணை முதல்வர் கேள்வி எழுப்பியதும், கல்வித்துறை அதிகாரிகளிடம், எந்த புள்ளி விபரமும் இல்லை. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குறுக்கிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், 'அரை மணி நேரத்தில் புள்ளி விபரங்கள் தருகிறோம்' எனக்கூறி, துணை முதல்வரிடம் சமாளித்தார்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் உதயநிதி பேசியதாவது:
பழுதடைந்த மின்கம்பம் மாற்றுவதற்கு கூட, பொதுமக்கள் அலையாய் அலைய வேண்டிய நிலை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளனர். பட்டா கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், முறையாக பட்டா வழங்க நடவடிக்கை இல்லை. பட்டா கேட்டு விண்ணப்பிப்போருக்கு, அவர்கள் கேட்கும் இடத்தில் வழங்க முடியவில்லை என்றால், மாற்று இடம் கண்டறிந்து வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். கோவிலை மையமாக வைத்து பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த உதயநிதி அளித்த பேட்டி: ''ஆய்வு கூட்டத்தில், மெத்தனமாக செய்யப்படும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment