வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு - Seithisudar

Sunday, October 20, 2024

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

 




படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:


செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், கடந்த 1ம் தேதி துவங்கும் காலாண்டிற்கு, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.


அதுமட்டுமின்றி, பதிவை தொடர்ந்து புதுப்பித்து, கடந்த செப்டம்பர் மாதம் 30 தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி., செவிலியர் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற முடியாது.


அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்று வருவோர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் உதவித்தொகை பெற இயலாது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, மனுதாரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.


மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, வயது மற்றும் ஆண்டு வருமானத்தில் வரம்பு ஏதுமில்லை. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot